சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால், மக்களின் நலனுக்காகத் தனது தொகுதியிலேயே 'மக்கள் தகவல் சேவை மையம்' ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். முகுந்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் குறைந்த வருவாய் பெறும் சாமானிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த சேவை மையத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும் என முகுந்தன் குறிப்பிட்டார். இத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே நேரடியாகக் கொண்டு சேர்க்க இம்மையம் பாலமாகச் செயல்படும் என்பதையும் சிரம்பான் ஜெயாவில் ஐந்து முனைப் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் முகுந்தன் தெரிவித்தார்

அத்துடன் தொகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதே தனது தலையாய கடமை என்றும் அவர் உறுதியளித்தார். ஏற்கனவே சிரம்பான் மாநகர்மன்ற துணை கவுன்சிலராகப் பணியாற்றிய அனுபவம் தமக்கு இருப்பதால், உள்ளூர் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மிகத் துல்லியமாக அறிந்து, அவற்றை விரைந்து களைவதில் தம்மால் மிகச் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்றும் எஸ். முகுந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.










