கோலாலம்பூர், டிசம்பர்.05-
மக்களவைக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக எதிர்க்கட்சி கொறடாவும், பாஸ் கட்சியின் கோத்தா பாரு எம்.பி.யுமான தக்கியுடின் ஹசானை நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது.
சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சரான டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் இதனை அறிவித்தார்.
மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் பயிற்சி தொடர்பில் கடந்த 1985 ஆம் ஆண்டில் கெடாவில் நிகழ்ந்த ரத்தக்களறி சம்பவமான Memali- யுடன் ஒப்பிட்டு மக்களவையில் உரையாற்றியது மூலம் தக்கியுடின் ஹசான் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் மக்களவையில் சூடான விவாதத்திற்கு வித்திட்டுள்ளார் என்று அவருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
பாஸ் கட்சியின் பொதுச் செயலாளரான தக்கியுடின், மக்களவையில் 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சு, மக்களவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதில் தக்கியுடினை நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸாலினா தெரிவித்தார்.








