தற்போதைய நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர வேண்டுமா? அல்லது அமைச்சரவையிலிருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து வரும் ஆகஸ்ட் 16 -ஆம் தேதி நடைபெறவுள்ள ஜசெக தேசிய மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
இது குறித்து ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வெளியிட்டுள்ள தகவலில், இந்த முக்கிய முடிவை கட்சியின் மத்திய செயற்குழு தனிப்பட்ட முறையில் எடுக்காது என்றும், தேசிய மாநாட்டில் பங்கேற்கத் தகுதியுள்ள 4,000-த்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வதா? அல்லது விலகுவதா? என்பது போன்ற முக்கிய முடிவை சிலர் மட்டுமே எடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அந்தோணி லோக், கட்சியின் ஜனநாயக நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவை அனைத்து பிரதிநிதிகளின் முடிவுகளில் விட்டுவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய செயற்குழு உறுப்பினர்களிடையே பல்வேறு கருத்துகள் இருந்தாலும், பிரதிநிதிகளின் வாக்கெடுப்பை பாதிக்கக் கூடாது என்பதற்காக செயற்குழு எந்தவொரு நிலைப்பாட்டையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறும் தேசிய மாநாட்டில் எடுக்கப்படும் முடிவே, ஜசெக-வின் எதிர்கால அரசியல் திசையை நிர்ணயிக்கும் என்றும், பிரதிநிதிகள் எடுக்கும் எந்த முடிவையும் தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அண்மைய தேர்தல்களில் ஜசெக கட்சியானது கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. சபா மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளையும் இழந்த அக்கட்சி, ஜோகூர் தேர்தலில் போட்டியிட்ட 17 தொகுதிகளில் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலிலும் இரண்டு தொகுதிகளை இழந்ததுடன், 2013-ஆம் ஆண்டு முதல் அந்தோணி லோக் வசம் இருந்த சென்னா தொகுதியையும் பாரிசான் வேட்பாளர் சியோ காங் சூன் இடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.








