கிள்ளான் , ஆகஸ்ட் 20-
அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாத உரிமைக் கட்சி, செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள மஹ்கோட்டா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து கலந்தாலோசித்து வருவதாக பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பி ராமசாமி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, உரிமைக் கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இல்லாததால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மஹ்கோட்டா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் நேரடி களமிறங்க முடியாத சூழலை தமது கட்சி எதிர்கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மஹ்கோட்டா மாநில சட்டமன்றத்தில் உள்ள வாக்காளர்களில் 7 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவார்.
இந்நிலையில், இந்தியர்களின் பெரும்பான்மையான வாக்குகளை உரிமை கட்சி ஆதரிக்கவுள்ள சுயேட்சை வேட்பாளர் பெறவில்லை என்றால், அது அத்தொகுதி தேர்தலில் தேசிய முன்னனி வேட்பாளரின் வெற்றிக்குப் பெரும் சவாலாக மாறிவிடும் என்று பி ராமசாமி தெரிவித்தார்.
அதேசமயம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் MADANI அரசாங்கத்தில் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு திருப்தி இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.








