மலாக்கா, நவ. 19-
மலாக்காவில் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் வரையில் எஸ்.கே.எஸ்.பி.எஸ். எனப்படும் சுயதொழில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15,741 பேர் சந்தாதாரர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர் என்று மலாக்கா மாநில மனித வள, ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்வி ஹீ செம் தெரிவித்தார்.
துணை சேவைத்துறையைச் சேர்ந்தவர்களே அதிகளவில் தங்களை பதிவு செய்து கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதில் 6,016 பேர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
அங்காடி வியாபாரிகள் 2,194 பேரும், பயணிகள் போக்குவரத்துறை துறையைச் சேர்ந்த 1,889 பேரும், பொருள் பட்டுவாடா போக்குவரத்து சேவை மற்றும் உணவுச் சேவைத்துறையில் 1,563 பேரும் தங்களை பதிவு செய்து கொண்டு இருப்பதாக டத்தோ ங்வி ஹீ செம் குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். காரணம், விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழுமானால் சுயதொழில் செய்கின்றவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய சமூக பாதுகாப்பத்திட்டமாக இது அமைந்துள்ளது என்று டத்தோ ங்வி ஹீ செம் தெரிவித்தார்.
இன்று மலாக்காவில் மலாக்கா மாநில ஊடகவியலாளர்களுடன் சொக்சோவின் நட்புறவுத்திட்டம் எனும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ங்வி ஹீ செம் இதனை குறிப்பிட்டார்.

படவிளக்கம்
சொக்சோ பாதுகாப்புக்கான சாற்றிதழைப்பெற்றுக்கொண்ட மலாக்கா ஊடகவியலாளர்களுடன் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்வி ஹீ செம்.
இந்நிகழ்வில் மலாக்கா மாநில சொக்சோ இயக்குநர் நூர் முகமட் பக்தியார் முகமட் அகிர், சொக்சோவின் வியூகத் தொடர்பு மற்றும் சொக்சோ ஆசிரியர் பிரிவின் தலைவர் டத்தோ தெங்கு காலிடா தெங்கு பிடின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சொக்சோவின் இந்த சுயதொழில் சமூக பாதுகாப்புத் திட்டம், மலாக்கா மாநிலத்தில் ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசிக்கின்ற ஓராங் அஸ்லி சமூகத்திற்கும் விரிவுப்படுத்தப்படும் என்று டத்தோ ங்வி ஹீ செம் குறிப்பிட்டார்.
புறநகர் பகுதிகளில் வசிக்கின்ற ஓராங் அஸ்லி சமூகத்தினர் பெரும்பாலோர் சுயதொழில் புரிந்த வருகின்றபடியால் அவர்களுக்கும் சொக்சோவின் சுயதொழில் பாதுகாப்புத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.

மாச்சாப் ஜெயா சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ங்வி ஹீ செம், தமது சொந்த தொகுதியில் ஓராங் அஸ்லி சமூகத்தினருக்கு சொக்சோ பாதுகாப்புத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிட்டத்தட்ட நூறு பேருக்கு சொக்சோ திட்டத்தில் பங்கு கொள்வதற்கான செலவினத்தை ஏற்றுக்கொண்டு இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த பகுதி நேர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊடகவியல் பணியை மேற்கொண்டு வரும் 21 ஊடகவியலாளர்களுக்கு ஓராண்டுக்கான சொக்சோ பாதுகாப்புத்திட்டத்தற்கான செலவினத்தை தாமே ஏற்று அதற்கான சான்றிதழையும் டத்தோ ங்வி ஹீ செம் வழங்கினார்.








