பினாங்கு, நவ.8-
பினாங்கு முன்னாள் முதலமைச்சரும், டிஏபி. யின் தலைவருமான லிம் குவான் எங், முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் இன்று வெற்றி பெற்றுள்ளார்.
லிம் குவான் எங்கிற்கு மானநஷ்ட இழப்பீட்டுத் தொகையாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் யாசினுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யயாசன் அல்-புகாரி அறவாரியம் தொடர்புடைய வரி விவகாரத்தில் தம்மை காயப்படுத்தும் வகையில் அவதூறான அறிக்கையை வெளியிட்டதாக கூறி, முன்னாள் நிதி அமைச்சரான லிம் குவான் எங், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருக்கு எதிராக இந்த அவதூறு வழக்கை பதிவு செய்து இருந்தார்.
இந்த அவதூறு வழக்கில் முகைதீன் வெளியிட்ட அறிக்கையினால் லிம் குவான் எந்த அளவிற்கு காயப்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்களை அவர் நிரூபித்துள்ளதாக நீதித்துறை ஆணையர் ரோஸ் மாவார் ரோஸாம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த லிம் குவான் எங், இஸ்லாமிய தொண்டு நிறுவனமான யயாசன் அல்-புகாரிக்கு முந்தைய அரசாங்கம் வழங்கிய வரி விலக்களிப்பு சலுகையை ரத்து செய்ததுடன், அந்த இஸ்லாமிய தொண்டு நிறுவனத்திற்கு கடும் வரி விதித்ததுடன், முந்தைய ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வரிக்கு 45 விழுக்காடு அபராதம் விதித்ததாகவும் தனக்கு எதிராக முகைதீன் அபாண்டமான குற்றச்சாட்டைக்கூறி, தமக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக லிம் குவான் தமது அவதூறு வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக முகைதீனின் மூன்று அறிக்கைகளும் செய்தி இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள்களால் பரவலாக வெளியிடப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த அறிக்கைகள் மூலம் இஸ்லாமிய சமூக அறக்கட்டளையின் மீது வரிகள் மற்றும் அபராதங்களை விதிக்க வருமான வரி வாரியத்திற்கு அனுமதி அளித்ததன் மூலம் நிதி அமைச்சர் என்ற முறையில் தாம், தம்முடைய பதவியையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்திருந்ததாக முகைதீன் குற்றஞ்சாட்டியிருந்தார் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
அதேவேளையில் தம்மை ஓர் இனவெறியர் என்றும், மலாய்க்காரர் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் விரோதி என்றும், பழிவாங்கும் குணம் கொண்டவர் என்றும் தம்மை தவறாக முகைதீன் சித்திரித்துள்ளார் என்று லிம் குவான் எங் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.








