அலோர் ஸ்டார், ஜனவரி.16-
கெடா மாநிலத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மக்கள் நீதி கட்சியான பிகேஆர் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான 2026-ஆம் ஆண்டின் முதல் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தை உள்துறை அமைச்சரும், கெடா மாநில கெஅடிலான் தலைவருமான டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் பின் இஸ்மாயில் வழிநடத்தினார்.
மாநிலம் முழுவதும் கட்சியின் அடிப்படை ஆதரவை விரிவுபடுத்துவதுடன், புதிய மற்றும் முற்போக்கான தலைமைத்துவத்தை உருவாக்குவதே முதன்மை நோக்கம் என டத்தோ ஸ்ரீ சைஃபுடின் தெரிவித்தார்.
மேலும், கட்சியில் நிலவி வரும் சில உள்விவகாரங்களைச் சீர்மைப்படுத்த இதுவே சரியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரும் பொதுத்தேர்தலில் கெடா மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளை மீண்டும் மக்கள் நீதி கட்சி கைப்பற்றுவதற்கான முன்நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்தல் பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான அரசியல் அணுகுமுறைகள் உள்ளடங்கும்.
மத்திய அரசின் ‘மடானி’ அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பொருளாதாரம், கல்வி, சமூக நலம் போன்ற திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது.
இதன் மூலம் மத்திய அரசின் பங்களிப்பை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வழிவகை செய்யப்படும்.
கெடா மாநிலத்தின் நிர்வாகம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்ய, ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகத் தனது கடமையைச் செவ்வனே தொடர கெடா மாநில கெஅடிலான் கட்சி உறுதியாக உள்ளது.
கெடா மாநில மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, கட்சியை அடிமட்டம் முதல் வலுப்படுத்துவதற்கான பணிகளில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.








