புத்ராஜெயா, டிசம்பர்.16-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் பத்து புதிய நியமனங்கள் அமைந்துள்ளன. இதில் இரண்டு புதிய அமைச்சர்கள் மற்றும் எட்டு புதிய துணை அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சபா, சரவாக் மாநிலங்களுக்கான அமைச்சராக புதிய முகமான டத்தோ முஸ்தஃபா சக்மூட் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக முகமட் தௌஃபிக் ஜொஹாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டத்தோ முஸ்தஃபா சக்மூட் , சபா பிகேஆர் கட்சியைச் சேர்ந்த செபங்கார் எம்.பி. ஆவார். முகமட் தௌஃபிக் ஜொஹாரி, பிகேஆர் கட்சியின் சுங்கை பட்டாணி எம்.பி. ஆவார். சுருங்கச் சொன்னால் மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துலின் மகன் ஆவார்.
தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சராகப் பதவி வகித்த சரஸ்வதி கந்தசாமி, அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சிகமாட் எம்.பி. R. யூனேஸ்வரன் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த டத்தோ டாக்டர் ஸலேஹா முஸ்தஃபா மற்றும் சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முகமட் நாயிம் மொக்தார் ஆகிய இரு அமைச்சர்கள், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள், நாளை காலை 10 மணிக்கு இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளவிருக்கின்றனர்.








