2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 18 ஆயிரத்து 800 கோடி வெள்ளி செலவிடப்பட்டு விட்டது
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு 2023 ஆம் ஆண்டுக்கான 38 ஆயிரத்து 614 கோடி வெள்ளி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஜுன் மாதம் வரையில் 18 ஆயிரத்து 800 கோடி வெள்ளி செலவிடப்பட்டு விட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
இதுவரையில் செலவிடப்பட்ட தொகையானது, மொத்த பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் 49 விழுக்காடாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய தொகையாகும் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு, இந்த அளவிற்கு விரைவாகவும், மிகத் துரிதமாகவும் பட்ஜெட் நிதி பட்டுவாடா செய்யப்படவில்லை என்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
எனினும் செலவிடப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் தாம் மனநிறைவு கொள்ளவில்லை என்றும், ஜுன் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 60 விழுக்காடு தொகை பட்டுவாடா செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.