கோலாலம்பூர், டிசம்பர்.28-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரஸாக்கின் வீட்டுக் காவல் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதைக் 'கொண்டாடும்' வகையில் கருத்து தெரிவித்த டிஏபி நாடாளுமன்ற யியோ பீ யின் மன்னிப்பு கேட்காததால், நம்பிக்கைக் கூட்டணியுடனான உறவை முறிக்க அம்னோ இளைஞர் அணி தீவிரமாக இறங்கியுள்ளதாக அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மால் சால்லே தெரிவித்துள்ளார். "வெளியேறுவதா அல்லது நீடிப்பதா?" என்ற தலைப்பில் வரும் ஜனவரி 3-ஆம் தேதி PWTC-யில் அம்னோ இளைஞர் அணி நடத்தவுள்ள சிறப்பு மாநாடு, மலேசிய அரசியலில் ஒரு மிகப் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யியோ பீ யினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பூச்சோங் தொகுதி அம்னோ ஏற்கனவே கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிலையில், தங்களின் அடுத்தக் கட்ட அதிரடி முடிவை இந்த மாநாட்டின் மூலம் கட்சியின் தலைமைக்குக் கொண்டு செல்ல டாக்டர் அக்மால் சால்லே திட்டமிட்டுள்ளார். "அவமானப்பட்டுக் கொண்டு ஆட்சியில் இருப்பதை விட, தன்மானத்துடன் எதிர்க்கட்சியாக இருப்பதே மேல்" என முழங்கியுள்ள அக்மால் சால்லே, அம்னோவின் உண்மையான குரலை ஒலிக்கச் செய்யத் தொண்டர்களுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.








