சுங்கை பட்டாணி, டிசம்பர்.28-
16-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, இஸ்லாமிய ஒற்றுமையை வலுப்படுத்த ‘ முவாஃபாகாட் நேஷனல்’ கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க வருமாறு அம்னோ தொண்டர்களுக்கு டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி அதிரடி அழைப்பு விடுத்துள்ளார். "அம்னோவில் தலைவர்கள் யாராக இருந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் பாஸ் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும்" என முழங்கியுள்ள சனுசி, திருமண வீடுகளில் நாம் அண்ணன்-தம்பிகளாகப் பழகிய அந்தப் பொற்காலச் சூழலை மீண்டும் உருவாக்குவோம் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
பெர்லிஸ் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அம்னோ இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மலின் கோரிக்கையை ஏற்று, பாஸ் கட்சி இந்த நேசக் கரத்தை நீட்டியிருப்பது மலேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே கொள்கை, ஒரே கிப்லாட் என ஒன்றுபட்டு நிற்பதன் மூலம் வரும் பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள சனுசி, பிரிந்து கிடக்கும் உறவுகளை ஒன்றிணையுமாறு வலியுறுத்தியுள்ளார்.








