Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு

Share:

சிரம்பான், ஜூலை.28-

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு இன்று காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும் உள்ள 38 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது.

மொத்தம் 22 ஆயிரத்து 389 ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைகள் முன்கூட்டியே வாக்களிப்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி, 34.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத் தலைவர் Datuk Seri Ramlan Harun கூறுகையில், இன்றைய முன்கூட்டியே வாக்குப்பதிவு 90 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் முன்கூட்டியே வாக்குப்பதிவு 94 சதவீதம் பதிவானதை சுட்டிக்காட்டிய அவர், இந்த முறை அதைக் காட்டிலும் அதிகளவில் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், போலீசார் மற்றும் ராணுவத்தினருக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு 100 சதவீதமாக இருக்கும் என்று பலர் கருதினாலும், அதனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடம் மற்றும் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டம் கட்டமாக மூடப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாவட்ட வாரியாகப் பார்க்கையில், 9,706 முன்கூட்டியே வாக்காளர்களுடன் போர்ட் டிக்சன் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து தம்பினில் 4,701 வாக்காளர்களும், ரெம்பாவ்வில் 2,355 வாக்காளர்களும், ராசாவில் 2,145 வாக்காளர்களும், சிரம்பானில் 1,635 வாக்காளர்களும், ஜெலெபுவில் 1,175 வாக்காளர்களும், ஜெம்போல் மற்றும் கோலா பிலாவில் முறையே 333 மற்றும் 289 முன்கூட்டியே வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும், போர்ட் டிக்சனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தபோதிலும், ராணுவத்தினரும் அவர்களது துணைகளும் தொடர்ந்து ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 103 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Related News