கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் இன்று தொடங்கிய அம்னோ பேராளர் மாநாட்டின் திறப்பு விழாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார், மலாய் பாரம்பரிய உடையில், கழுத்தில் மாட்டப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் மாநாட்டின் பிரதான மண்டபத்திற்குள் காலை 9.45 மணியளவில் நுழைந்த போது, பேராளர்கள் எழுந்து நின்று, கைத்தட்டி ஆரவாரம் செய்து தங்களின் முன்னாள் துணைத் தலைவருக்கு மகத்தான் வரவேற்பை நல்கினர்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் இதர ஆளும் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் புடைசூழ அன்வார், மாநாட்டின் பிரதான மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்களும் மாநாட்டின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டனர். DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக், அமானா கட்சி தலைவர் முகமட் சாபு, துணைப்பிரதமர் ஃபட்டில்லா யூசோப் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர்.
நாட்டின் துணைப்பிரதமர் மற்றும் அம்னோவின் துணைத் தலைவர் என்ற முறையில் அன்வார் அம்னோ மாநாட்டில் ஆகக்கடைசியாக கலந்து கொண்டது 1998 ஆம் ஆண்டாகும். அந்த மாநாட்டில்தான் அம்னோவின் துணைத் தலைவர் என்ற முறையில் அன்வாரின் அரசியல் வாழ்க்கையை முடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது.
அம்னோவின் தலைவரும் நாட்டின் பிரதமருமான துன் மகாதீர் முகமது தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொரு பேராளர்களின் இருக்கைகளிலும் வைக்கப்பட்ட கைப்பைகளில் " நாட்டின் பிரதமராக அன்வார் வரமுடியாததற்கு 100 காரணங்கள்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் மிக ரகசியமாக வைக்கப்பட்டு, அன்வார் அவமானப்படுத்தப்பட்டார்.
அந்த மாநாடு பெரும் சர்ச்சையில் முடிந்த நிலையில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி நாட்டின் துணைப்பிரதமர் மற்றும் அம்னோ துணைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து அன்வார், துன் மகாதீர் முகமதுவினால் அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது வரலாறாகும். .

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


