கோத்தா கினபாலு, டிசம்பர்.09-
லாமாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, அவரது தொகுதியில் உள்ள காலியிடம் குறித்து முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கப்படும் என சபா மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஶ்ரீ காட்ஸிம் எம்.யாஹ்யா தெரிவித்துள்ளார்.
துக்கத்தில் இருக்கும் புங் மொக்தாரின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவசரம் இன்றி, பொருத்தமான நேரத்தில் மட்டுமே இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் காட்ஸிம் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு அறிவிப்பதற்கு முன்பாக, மாநில தேசிய பதிவிலாகாவிடம், தாம் இது குறித்து உறுதிப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலில், 153 வாக்குகள் பெரும்பான்மையில், தனது லாமாக் சட்டமன்ற தொகுதியை மீண்டும் தக்க வைத்த புங் மொக்தார், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதற்குள் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.








