கோலாலம்பூர், டிசம்பர்.22-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து, பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்பது அம்னோவின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக் காட்டிப் பேசிய ரஃபிஸி, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நாட்டின் சட்ட திட்டங்களையும், அரசியலமைப்பு நடைமுறைகளையும் அம்னோ மதிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு தனி நபருக்காகச் சட்டத்தை வளைக்க முடியாது. நஜீப் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு அல்லது மன்னிப்பு வாரியத்திற்கு அம்னோ அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ரஃபிஸி வலியுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ அங்கம் வகித்தாலும், ஊழல் மற்றும் நீதி விவகாரங்களில் பாகாத்தான் ஹராப்பான் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை அம்னோவிற்கு ரஃபிஸி நினைவூட்டியுள்ளார்.
குறிப்பாக, மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் நற்பெயரைக் காக்க வேண்டுமானால், இத்தகைய விவகாரங்களில் வரம்பு மீறக்கூடாது என்ற எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது என்று ரஃபிஸி குறிப்பிட்டார்.








