கங்கார், டிசம்பர்.27-
பாஸ் கட்சியிலிருந்து தனது உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதையடுத்து, தன்னை இணைத்துக் கொள்ள பல்வேறு கட்சிகளிடமிருந்து அழைப்பு வருவதாக பிந்தோங் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஃபக்ருல் அன்வார் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அக்கட்சிகள் தன்னை தேர்தலில் போட்டியிட வேட்பாளராகக் களமிறக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், தனது இளம் வயது முதல் பாஸ் கட்சியில் இருப்பதால், பாஸ் கட்சி தனது இதயத்திற்கு மிக நெருக்கமானது என்றும் ஃபக்ருல் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு அடிப்படை உறுப்பினராக பாஸ் கட்சியில் இணைந்து, அக்கட்சியில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி உயர்வு பெற்றவர் என்பதால், பாஸ் கட்சியின் பல போராட்டங்களில் தனது பங்களிப்பைக் கொடுத்துள்ளதாகவும் ஃபக்ருல் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், கட்சி தன் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அப்பீல் செய்யப் போவதாகவும் ஃபக்ருல் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெர்லிஸ் மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன் வைத்ததற்காக, ஃபக்ருல் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைப் பாஸ் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.








