நெங்கிரி, ஜூன் 19-
நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டு, அத்தொகுதி காலியாகி விட்டதாக இன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பெர்சத்து கட்சியின் குவா மூசாங் தொகுதியின் முன்னாள் தலைவருமான அஜிஸி அபு நைம் அறிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்ட அடுத்த கணமே தமக்கு எதிராக கிளந்தான் சட்டமன்றம், இந்த முடிவை எடுக்கும் என்பது, தாம் எதிர்பார்த்ததுதான் என்று அஜிஸி அபு நைம் குறிப்பிட்டுள்ளார்.
கிளந்தான் சட்டமன்றத்தின் இந்த முடிவு தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமது நிலையை தற்காத்துக்கொள்வதற்கு இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது குறித்து தமது வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாக அஜிஸி அபு நைம் தெரிவித்துள்ளார்.








