கோலாலம்பூர், நவ.21-
தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கல்விப் பேராளர்கள் குழுவின் வருகையை ஏற்று உபசரித்து இருக்கும் கல்வி அமைச்சின் நடவடிக்கையை அதன் அமைச்சர் ஃபாட்ஹ்லினா சீடேக் இன்று தற்காத்துப் பேசினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசாங்கம், பெண்களின் கல்விக்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்திய போதிலும் பெண்களின் கல்வி உரிமை குறித்து அறிந்து கொள்வதற்கு ஆப்கானிஸ்தான் கல்விக்குழுவினர் மலேசியாவிற்கு மேற்கொண்ட வருகையின் மூலம் பெண்களின் கல்வி வாய்ப்புகள் எத்தகைய மகத்துவமானது என்பதை அந்த தூதூக்குழு அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பை மலேசியா ஏற்படுத்தி தந்துள்ளதாக ஃபாட்ஹ்லினா சீடேக் விளக்கினார்.
ஒரு மெல்லிய வெங்காயத் தோலைக்கூட எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு இவ்வருகையின் மூலம் தலிபான் தலைமையிலான அரசாங்கத்தின் கண்களைத் திறப்பதற்கு மலேசியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாக ஃபாட்ஹ்லினா சீடேக் குறிப்பிட்டார்.
தலிபானின் கண்களை திறக்கும் பணி நிறைவுபெற்று விட்டது.தற்போது அவர்கள் கல்வித்துறை சார்ந்த அடுத்தக்கட்ட பணியை மேற்கொள்வர் என்று ஃபாட்ஹ்லினா சீடேக் விளக்கினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், மலேசியப் பெண்களைப் போல பள்ளிக்கு செல்ல வேண்டும். கல்வியின் உயரத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இவ்வருகையின் மூலம் அவர்களுக்கு நாம் ஒரு பாடத்தை உணர்த்தியுள்ளோம்.
மலேசியா எப்போதுமே மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான நாடாக பார்க்கப்பட வேண்டும். பெண்களுக்கான கல்வியில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்களின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடக்கூடிய ஒரு துணிச்சல் மிகுந்த நாடாக மலேசியா மிளிர வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஃபாட்ஹ்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.








