Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பெண் பிரதிநிதித்துவம்: மஇகாவுக்கு ஸ்கூடாய் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி கண்டனம்
அரசியல்

பெண் பிரதிநிதித்துவம்: மஇகாவுக்கு ஸ்கூடாய் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி கண்டனம்

Share:

மலேசிய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஜனநாயக செயல் கட்சியான ஜசெக சொல்வதைச் செய்கிறது என்றும், ஆனால் மஇகா இதில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் வலியுறுத்தியுள்ளார்.

கார்த்தியாயினி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஜசெக மகளிர் பிரிவின் ‘ஹர்லீட்’ தலைமைத்துவப் பயிற்சித் திட்டம் மூலம் பெண்கள் வெறும் தேர்தல் கண்துடைப்பு வேட்பாளர்களாக இல்லாமல், உண்மையான தலைவர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஆனால், புத்தோற்றம் மற்றும் உள்ளடக்கிய அரசியல் குறித்துப் பேசும் மஇகா, நடப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளரைக்கூட களமிறக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்று கார்த்தியாயினி சாடினார். கட்சிக்காக உழைத்த தகுதியான பெண் தலைவிகளும், இளம் பெண் நிபுணர்களும் மஇகாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் மக்கள் தொகையில் பாதியளவாக இருக்கும் பெண்களுக்கு, அரசியல் முடிவெடுக்கும் தளங்களிலும் தகுதியின் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

எனவே, வெற்று வாக்குறுதிகளைத் தவிர்த்து, அனைத்து கட்சிகளும், குறிப்பாக மஇகா, பெண்களின் தலைமைத்துவ வாய்ப்புகளை உறுதி செய்ய இனியாவது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கார்த்தியாயினி கேட்டுக்கொண்டார்.

Related News