டிச.10-
சமூக வலைத்தளங்கள் உட்பட பிறரை நிந்திக்கும் தன்மையிலான பகடிவதைகளில் ஈடுபடுகின்ற அல்லது சினமூட்டுகின்ற நபர்களுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்கும் 2024 ஆம் ஆண்டு பகடிவதை குற்றவியல் தடுப்பு சட்டத்திருத்தம், இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
சமூக வலைத்தளங்கள் உட்பட எந்தவொரு சூழ்நிலையிலும் பிறரை பகடிவதை செய்து நிந்திக்கும் செயலில் ஈடுபடுவது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு வெறும் 100 வெள்ளி அபராதம் விதிக்கும் சட்ட நடைமுறை இனி எடுபடாது.
மாறாக, குற்றம் இழைத்தவர்களுக்கு குறைந்த பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் கூடிய பட்ச அபராதம் விதிக்க இச்சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
தவிர, சமூக வலைத்தளங்களில் பிறரை பகடிவதை செய்து, இஷா ராஜேஸ்வரியைப் போன்று சம்பந்தப்பட்டவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படுமானால், அவர்களை பகடிவதை செய்த நபர்களுக்கு குறைந்த கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டம் வகை செய்வதாக சட்டம் மற்றும் துறை சார்ந்த திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் சிறார்கள் உட்பட தனிநபர்களின் கண்ணியமும், அவர்களின் தன்மானமும் உரசிப்பார்க்கப்படுவதை தடுப்பதற்காகவே 2024 ஆம் ஆண்டு பகடிவதை குற்றவியல் தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாக அஸாலினா விளக்கினார்.








