கோலாலம்பூர், பிப்ரவரி.20-
நாடாளுமன்றத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில், கட்சியின் தலைவர்கள் அனைத்து அரசாங்கப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க வரும் ஜூலை 12 ஆம் தேதி ஜசெக ஒரு சிறப்பு மாநாட்டைக் கூட்டவுள்ளது.
சீன நாளிதழான Sin Chew Daily வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜசெக.வி.ன இந்த சிறப்பு மாநாட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய முக்கிய அரசியல் முடிவு, ஜசெக மத்திய செயற்குழுவால் தீர்மானிக்கப்படாமல், கட்சியின் உயர்மட்டம் முடிவெடுக்க, சிறப்பு மாநாட்டிற்குக் கொண்டுச் செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் , நகராண்மைக்கழக உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களான GLC- யில் பதவிகள் வகித்து வரும் டிஏபி பிரதிநிதிகள், தங்கள் பதவிகளைத் துறக்க வேண்டுமா அல்லது நீடிக்க வேண்டுமா என்பதை இந்த சிறப்பு மாநாட்டில் பேராளர்கள் தீர்மானிக்கவிருக்கின்றனர்.
இது குறித்து ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறுகையில், "கட்சி சார்பில் அரசாங்கத்தில் பதவி வகித்து வருகின்றவர்கள், தங்கள் பொறுப்புகளிலிருந்து விலக முடிவு செய்தால், அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள்; ஆனால், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு அடுத்த பொதுத் தேர்தல் வரை தொடர்ந்து ஆதரவளிப்பார்கள்," என்றார்.
ஜசெக. சார்பாக எங்களின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் நிலைத்தன்மையை உறுதிச் செய்வார்கள். ஆனால் அரசாங்கத்தில் எங்கள் பங்கு என்ன என்பதை மாநாட்டில் திரளவிருக்கும் பேராளர்களே முடிவு செய்வார்கள் என்று போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ஜசெக. தலைவர்கள், நடப்பு அரசாங்கத்தில் பதவிகளில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று முடிவு செய்வார்களேயானால் அரசாங்கத்தின் பொறுப்புகளையும், அதனால் ஏற்படக்கூடிய அழுத்தங்களையும் ஏற்க வேண்டும். பதவியில் இருந்து கொண்டு அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட முடியாது என்று அந்தோணி லோக் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தற்போது ஜசெக வசம் 5 அமைச்சர்கள், 7 துணை அமைச்சர்கள், ஒரு முதலமைச்சர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் நகராண்மைக்கழக மற்றும் ஊராட்சி மன்றப் பொறுப்பாளர்களாக அதிகாரப் பதவிகளில் உள்ளனர்.
செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த இந்த மாநாடு, தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற்கு முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது.
ஜசெக.வின் இந்த நடவடிக்கை பிரதமருக்கு விடுக்கப்படும் மிரட்டல் அல்ல என்றும், "புறக்கடை அரசாங்கம்" போன்ற எதற்கும் ஜசெக. துணை போகாது என்றும் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.








