பினாங்கு மாநிலத்தில் 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையான போட்டிகள் நிகழ்ந்தாலும் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் பிறை சட்டமன்றத் தொகுதியில் மரம் சின்னத்தில் போட்டியிடும் ஒரு சுயேட்சை வேட்பாளரான டேவிட் மார்ஷல், நாளை நடைபெறும் தேர்தலில் கடும் போட்டியைக் கொடுப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ள டேவிட் மார்ஷல், தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வெள்ளிக்கிழமை பிறை பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப்பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். நாளை சனிக்கிழமை பிறை சட்டமன்றத் தொகுதியில் புதிய வரலாறு படைக்கப்படும் என்று டேவிட் மார்ஷல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நகராண்மைக் கழக உறுப்பினராக கடந்த 10 ஆண்டு காலமாக பொறுப்பேற்று இருந்தவரான டேவிட் மார்ஷல், பிறை வட்டார இந்தியர்களுக்கு பல்வேறு சமூக நல உதவிகளைச் செய்தவர் ஆவார். வெளியில் உள்ள வாக்காளர்கள், சிரமம் பாராமல் வருகை தந்து, ஒரு சுயேட்சை வேட்பாளரான தமக்கு வாக்களித்து தமது வெற்றியை உறுதி செய்யுமாறு டேவிட் மார்ஷல் கேட்டுக்கொண்டார்.








