மலேசியாவின் அடுத்த 16-வது பொதுத்தேர்தல், இன்னும் நான்கு முதல் ஐந்து மாதங்களில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக மசீச தலைவர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
16-வது பொதுத்தேர்தலுக்காக மசீச ஏற்கனவே முன்கூட்டியே தயாராகி வருவதாகவும், கடைசி நேரத்தில் தேர்தல் பணிகளைத் தொடங்காமல் ஆரம்பத்திலிருந்தே தயாரிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசு, பொதுவாக ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்வதில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே தேர்தல் நடத்தப்படுவது வழக்கம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அதன் படி தற்போது தேர்தலுக்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 16-வது பொதுத்தேர்தலில் குளுவாங் தொகுதியை மசீச விட்டுக் கொடுத்து அம்னோ போட்டியிட வேண்டும் என்ற அம்னோ கிளையின் முன்மொழிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்த விவகாரத்தை அடிமட்டத்தில் விவாதிக்கலாம் என்றும் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
எனினும், இறுதி முடிவை பாரிசான் நேஷனல் மத்திய தலைமைத்துவம் தான் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








