கடந்த 2014-ஆம் ஆண்டு பாரிசான் நேஷனல் ஆட்சியைக் கவிழ்க்க, பாஸ் கட்சிக்கு அமெரிக்கா உதவ முன்வந்ததாக, அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வெளியிட்ட தகவல் தொடர்பாக அவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கோலாலம்பூரில் ஹாடியை விசாரணை செய்த போலீசார், அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிர் சுலைமான் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் சில சாட்சிகளிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைக்கு முழுமையாக ஹாடி அவாங் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் ஷாஹிர் சுலைமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா மலேசியாவுக்கு வருகை தந்த போது, அப்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க பாஸ் கட்சிக்கு அமெரிக்கா உதவி வழங்க முன்வந்ததாக ஹாடி அவாங், பாஸ் கட்சியின் 72ஆவது ஆண்டு மாநாட்டில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








