நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட பிரகடனம் சட்டபூர்வமானது என மாநில ஆட்சிக் குழு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, துவாங்கு நாட்ஸாருடின் துவாங்கு ஜாஃபார், நெகிரி செம்பிலானின் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும்,
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட பதவி நீக்கப் பிரகடனத்தில் முறையாக பதவியில் இருந்த நான்கு உண்டாங் தலைவர்களும் கையெழுத்திட்டு முத்திரையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மந்திரி பெசாரும் கையெழுத்திட்டதன் மூலம் மாநில அரசியலமைப்பின் பிரிவு 10(2)-ன் கீழ் பிரகடனம் முழுமையடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், துவாங்கு நாட்ஸாருடின் துவாங்கு ஜாஃபார் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டதும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிகேயு எனப்படும் உண்டாங் தலைவர்கள் பேரவை கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் தொடர்ந்து மாநில ஆட்சியாளராகவே இருப்பார் என்றும், அவரை பதவி நீக்கும் சமீபத்திய முயற்சி செல்லாது என்றும் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே ஏப்ரல் மாதம் நான்கு உண்டாங் தலைவர்கள் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை பதவி நீக்கியதாக அறிவித்திருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் துவாங்கு நாட்ஸாருடின் துவாங்கு ஜாஃபார், மலாக்காவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12-ஆவது ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டார்.
மேலும், கடந்த வாரம் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை பதவி நீக்கும் பிரகடனத்தில் இஸ்மாயில் லாசிம் கையெழுத்திட்டிருந்தார். ஆனால், தாம் கட்டாயப்படுத்தப்பட்டு கையெழுத்திட்டதாகவும், அந்த ஆவணம் செல்லாது என்றும் இஸ்மாயில் லாசிம் கூறியுள்ளார்.
இதனை நான்கு உண்டாங் தலைவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுத்துள்ளார். இதனிடையே, ஆட்சியாளரை பதவி நீக்கும் பிரகடனத்தை மாநில நிர்வாகம் அமல்படுத்த வேண்டும் என வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக போலீசில் புகார் அளிக்க டிகேயு தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.








