Apr 16, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்
அரசியல்

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

மலேசியா - இந்தியா இடையிலான வர்த்தகத்தையும் முதலீடுகளையும் இரு நாடுகளின் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உடன்பாடு கண்டுள்ளனர். இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் இணைந்து செயல்படுத்தவுள்ள இந்த புதிய நடைமுறை, 2025-ஆம் ஆண்டில் 18.59 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை மேலும் எளிதாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டார, அனைத்துலக அமைதி விவகாரங்களில் இந்தியா வழங்கி வரும் ஆதரவிற்குப் பிரதமர் அன்வார் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இரு நாடுகளின் நட்புறவின் அடையாளமாகச் சபாவின் கோத்தா கினபாலுவில் இந்தியத் தூதரகம் திறக்கப்படவும் ஒப்புதல் அளித்துள்ளார். மலேசியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் செம்பனை, மின்சாரப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், பெட்ரோலியம், இரசாயனப் பொருட்கள் இறக்குமதியை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

சுமார் 29 இலட்சம் இந்திய வம்சாவளியினரைக் கொண்டுள்ள மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேம்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 'விரிவான வியூகக் கூட்டாண்மை' நிலையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பொருளாதாரம், பாதுகாப்பு அடிப்படையில் தங்களின் ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுச் செல்ல உறுதி பூண்டுள்ளன.

Related News

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த... | Thisaigal News