கோலாலம்பூர், நவம்பர்.18-
நாட்டின் பிரதமர் என்ற முறையில் அரசாங்க நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தாம் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளிலும் அரசாங்க வாகனத்தையும், மெய்க்காவல் படையினரையும் பயன்படுத்துவதற்குத் தமக்கு அனுமதி உண்டு என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
அண்மையில் தாம் மேற்கொண்ட சபா வருகையின் போது தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தியது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் இந்த விளக்கத்தைத் தந்தார்.
சபாவிற்கு கடந்த சனிக்கிழமை தாம் மேற்கொண்ட வருகையானது முழுக்க முழுக்க தாம் சார்ந்துள்ள கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாகும். வரும் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா தேர்தலையொட்டி கட்சி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கும் நிகழ்வில் பிகேஆர் தலைவர் என்ற முறையில் தாம் கலந்து கொண்டதாக அன்வார் குறிப்பிட்டார்.
அது அரசாங்க நிகழ்ச்சி அல்ல என்றாலும் கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசாங்க வாகனத்தைத் தாம் பயன்படுத்த முடியும் என்று சட்ட ஒதுக்கீடு இருப்பதாக பிரதமர் சுட்டிக் காட்டினார்.
மேலும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களில் மெய்க்காவலர் படையைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தையும் தாம் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








