மலாக்கா மாநிலத் தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது என்பது குறித்து பாரிசான் நேஷனல் கூட்டணியின் உச்ச மன்றம் கூட்டாக முடிவு செய்யும் என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
தான் கூட்டணித் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக முடிவு செய்யப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் தேர்தல் வியூகம் ஆகியவை கட்சி மற்றும் கூட்டணி நடைமுறைகளின்படி தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள சாஹிட், கூட்டரசு நிலையில் ஏற்கனவே வழங்கியுள்ள உறுதிமொழிகளை பாரிசான் நேஷனல் தொடர்ந்து மதிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, மலாக்கா சட்டமன்றம் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 28 தொகுதிகளில் பாரிசான் நேஷனல் 21 இடங்களையும், பாக்காத்தான் நேஷனல் 5 இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் 2 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.








