2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் வரும் அக்டோபர் மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மனிதநேய பொருளாதார உலகக் கருத்தரங்கம் 2026 நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 2026 வரவு செலவுத் திட்டமானது, 470 பில்லியன் ரிங்கிட் மதிப்பில், மலேசிய வரலாற்றிலேயே மிகப்பெரிய தேசிய வரவு செலவுத் திட்டமாக அமைந்ததாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று முன்தினம், இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் முக்கியத் தரப்பினருடன் தேசிய வரவு செலவுத் திட்டம் 2027 தொடர்பான கலந்தாலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.
மடானி பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
மேலும், 13ஆவது மலேசியத் திட்டம், தேசிய ஆற்றல் மாற்ற கால அட்டவணை மற்றும் புதிய தொழில்முறை முதன்மைத் திட்டம் 2030 ஆகியவற்றில் வகுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கைகளின்படியே இந்த வரவு செலவு வடிவமைக்கப்படும் என்றும், நாட்டை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் சிறந்த வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.








