ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.21-
வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜசெக கட்சியின் சிறப்பு மாநாடு, ஒற்றுமை அரசாங்கத்தில் கட்சியின் பங்களிப்பு குறித்து அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டறியும் ஒரு முக்கியத் தளமாக அமையும் என சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
சுமார் 4,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், கட்சியின் தலைவர்கள் அரசாங்கப் பதவிகளிலிருந்து விலக வேண்டுமா அல்லது நீடிக்க வேண்டுமா என்பது குறித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்த மாநாடு வெறும் கண் துடைப்பு என்ற விமர்சனங்களை நிராகரித்த ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினரான சாவ் கோன் இயாவ், கட்சி எடுக்கும் முக்கிய முடிவுகளில் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் குரல் எதிரொலிப்பதை இது உறுதிச் செய்யும் என்றார்.
புத்ராஜெயாவில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் போது, தொண்டர்களின் உண்மையான உணர்வுகளைத் தலைமைத்துவம் செவிமெடுக்க இது ஒரு 'உட்புற பொது வாக்கெடுப்பு' போல அமையும் என்று அவர் தனது சட்டமன்றத் தொகுதியான பாடாங் கோத்தாவில் சீனப் புத்தாண்டு உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் இதனைக் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில ஆட்சிக் குழுவில் உள்ள ஜசெக உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் துறப்பார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் சாவ் கோன் இயாவ், இது குறித்து மாநாடு எடுக்கும் முடிவே இறுதியானது என்றார். கட்சியின் கட்டளைக்குத் தாம் முழுமையாகக் கட்டுப்படுவதாகத் தெரிவித்த அவர், 4,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் முடிவு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவித்தார்.








