போக்குவரத்து அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் பதவி விலகும் முடிவை, கட்சியின் மத்திய செயலவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னரே முன்வைத்ததாக ஜசெக துணைப் பொதுச் செயலாளர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய செயலவை எடுத்த முடிவு இறுதியானது என்றும் அவர் கூறினார்.
மத்திய செயலவை கூட்டம் நீண்ட நேரம் நடைபெற்றதாகவும், பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஹன்னா தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கப்பட்டு, எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜசெக எடுத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சராகப் பதவி விலக முன்வந்துள்ளார்.
இதற்கிடையே, அந்தோணி லோக் தற்போது அதிகாரப்பூர்வ பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், நாடு திரும்பியதும் தனது பதவி விலகல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்.








