கோலாலம்பூர், டிச.6-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு தேடப்பட்டு வரும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகனை பிடிப்பதற்கு மலேசியா சார்வு செய்துள்ள சிவப்பு அறிக்கை நோட்டீஸை, இண்டர்போல் போலீசார் இன்னமும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் முகைதீன் யாசினின் மருமகன் அட்லான் பெர்ஹானை இண்டர்போல் மூலமாக பிடிப்பதற்கு சிவப்பு நோட்டீஸ் அறிக்கைக்கு மலேசியா விண்ணப்பித்துள்ளது.
அனைத்துலக போலீசாரின் ஒத்துழைப்பை நாடுவதற்கான இந்த விண்ணப்பத்தை செய்வதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலீஸ் துறையின் உதவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். நாடியதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த விண்ணப்பம், இன்னமும் இண்டர்போல் மதிப்பீட்டு பரிசீலனையில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் இன்று கம்பார் எம்.பி. சோங் ஸெமினின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் சைபுடின் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.








