கோம்பாக், ஜனவரி.30-
இந்தோனேசியாவிற்கு 5,207 ஹெக்டேர் நிலத்தை மலேசியா விட்டுக் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பேச்சு, சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருவதாகச் சாடிய அவர், இத்தகைய தரம் தாழ்ந்த அரசியல் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கோம்பாக்கில் மஸ்ஜித் அர்-ரஹீமாவில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு குறிப்பிட்டார்.
சபா-கலிமந்தான் எல்லைக்கு அருகிலுள்ள Nunukan பகுதியில் உள்ள மூன்று கிராமங்களுக்காக இந்த நிலம் இழப்பீடாக வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுடின் கேள்வி எழுப்பியிருந்தார். இது நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்திய போதிலும், ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார்.








