கோலாலம்பூர், ஜனவரி.25-
பெர்லிஸில் பதவி நீக்கம் செய்யப்பட்ட மூன்று முன்னாள் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை 'சுயேச்சை' உறுப்பினர்களாகத் தொடர அனுமதிக்குமாறு பெர்லிஸ் மாநில முதல்வர் அபு பாக்கார் ஹம்ஸா முன்வைத்த கோரிக்கை, பாஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தலையிடும் முயற்சி அல்ல என்று பெர்சாத்து கட்சி விளக்கமளித்துள்ளது. அந்த மூன்று தொகுதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மக்கள் நலச் சேவைகளிலும் ஏற்பட்டுள்ள நிர்வாகத் தேக்க நிலையை சரிசெய்யவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகப் பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் துன் ஃபைசால் இஸ்மாயில் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற அவைத் தலைவரின் முடிவிற்கு எதிராக அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால், தொகுதிகளின் நிலைமை கேள்விக்குறியாக இருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், இது நிர்வாக நிலையிலான தீர்வுதானே தவிர, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும், மாநில முதல்வர் தனது மாநில நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்றும் பாஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் அஹ்மாட் ஃபாட்லி ஷாரி பதிலடி கொடுத்துள்ளார்.








