புத்ராஜெயா, நவம்பர்.07-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் இன்னும் இரண்டு, மூன்று வாரத்தில் சீரமைப்பு நடைபெறலாம் என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் இன்று கோடி காட்டியுள்ளார்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற புதிய யோசனைகள் மீதான விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ஸம்ரி, வருகின்ற ஆண்டுகளிலும் இது போன்ற நிகழ்விற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரின் ஆதரவைத் தாம் எதிர்பார்ப்பதாகவும், ஆனால், இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை சீரமைப்பில் தமது நிலை என்ன என்பது தெரியவில்லை என்றார்.
தாம் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெறப் போவதும், போகாததும், இரண்டாம் பட்ச கேள்வி என்றாலும், இது போன்ற நிகழ்விற்கு பிரதமர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாரிசான் நேஷனலின் பொதுச் செயலாளரான Dr Zamri, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி மேலவையின் செனட்டராக நியமிக்கப்பட்டு, அதன் மூலம் தற்காப்பு அமைச்சராகவும், பின்னர் உயர்கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.








