கோலாலம்பூர், நவ.11-
மலேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட், விமானங்களின் நீண்ட காலம் ஆயுளையும், செயல்பாட்டு நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்கு பல உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமான வழித்தடங்களுக்கான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
விமானங்களின் அதிக செயல்திறன் மிக்க பராமரிப்பை மேற்கொள்ளவும், விமானம் சேதமடையும் அபாயத்தை குறைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குவதற்கும் ஏதுவாக சில வவழித்தடங்களுக்கான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார்.
நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸின் பாதுகாப்புத் தரங்கள் தொடர்ந்து பராமரிக்கப்படுவது மட்டுமின்றி, விமானங்களின் பராமரிப்பு அம்சங்களை வலுப்படுத்த பல விரிவான நடவடிக்கைகளின் வாயிலாக தற்போது பலப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தவிர விமானங்களின் தொழில்நுட்ப சிக்கல்களுக்கான காரணங்களை கண்டறியவும், அவற்றை நிவர்த்தி செய்யவும், பாதுகாப்பு நடைமுறைகளையும், நெறிமுறைகளையும் மேம்படுத்தவும், மலேசிய ஏர்லைன்ஸிற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது துணை அமைச்சர் ஹஸ்பி ஹபிபொல்லா இதனை தெரிவித்தார்.
மலேசிய ஏர்லைன்ஸின் செயல்பாட்டுத்திறன்கள் கடந்த அக்டோபர் மாதம் வரையில் 80 விழுக்காடு வரை மேம்படுத்தப்பட்டு இருக்கும் விவரத்தையும் அவர் வெளியிட்டார். மேலும் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும் உக்திகளில் ஒன்றாக மலேசிய ஏர்லைன்ஸ் புதிய விமானங்களை வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








