வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 6 மாநிலங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தங்கள் சொத்து விவரங்களை பிரகடனப்படுத்த வேண்டும் என்று பொதுவாக வலியுறுத்தப்பட்ட போதிலும் அதற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர் மூடா கட்சியைச் சேர்ந்த 19 வேட்பாளர்கள்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத்தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் உட்பட 19 மூடா வேட்பாளர்கள் சத்தியப் பிரமாண பிரகடனத்தின் வாயிலாக இன்று தங்கள் சொத்து விவரங்களை அறிவித்தனர்.
மக்களுக்கு சேவையாற்ற முனைகின்றவர்கள், புறவாழ்வில் மட்டும் அல்ல அகவாழ்விலும் தூய்மை, நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றை உயிர் மூச்சாக கொள்வது மட்டுமின்றி, மக்கள் தொடர்புடைய நிர்வாகத்திலும் வெளிப்படை போக்கையும் கொண்டிருக்க வேண்டும் என்று கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் ரா. சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.
இதேபோன்று மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் தங்கள் சொத்து விவரங்களை அறிவித்தால் ஓர் ஆரோக்கியமான அரசியல் தேர்தல் கலத்திற்கு வளமாக இருக்கும் என்று டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்துகிறார்.








