கோலாலம்பூர், நவ. 11-
தொடக்கப்பள்ளியில் ஆறாம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வு மற்றும் இடைநிலைப்பள்ளியில் மூன்றாம் படிவ PT3 தேர்வு ஆகியவை இனியும் தேவையில்லை என்று கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் இன்று திட்டவட்டடமாக தெரிவித்துள்ளார்.
அவ்விரு அரசாங்கத் தேர்வுகளை ரத்து செய்து இருக்கும் கல்வி அமைச்சின் முடிவு தீர்க்கமானதாகும். அந்த தேர்வுகளை மறுபடியும் கொண்டு வருவதற்கு கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
கல்வி அமைச்சைப்பொறுத்தவரையில் அவ்விரு தேர்வுகளும் இனியும் அவசியமில்லை என்று கருதப்படுகிறது. குறிப்பாக தேசிய கல்வித் தத்துவம், அதன் தேசிய கோட்பாட்டு முதன்மை நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் அவ்விரு தேர்வுகளும் இனியும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஃபாட்லினா சிடேக் விளக்கினார்.
அவ்விரு தேர்வுகளுக்கு பதிலாக பிபிஎஸ் எனப்படும் பள்ளியை அடிப்படையாக கொண்ட மதிப்பீட்டுத் தேர்வு முறைக்கு கல்வி அமைச்சு வழிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளி அளவிலான தேர்வு முறையைக்கொண்ட பிபிஎஸ் தேர்வை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் தற்போது கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் நிறைவின் போது ஃபாட்லினா சிடேக் இதனைத் தெரிவித்தார்








