கோலாலம்பூர், ஜூன் 19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு நல்கியதற்காக தனது முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பெர்சத்து கட்சி மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையின் எதிரொலியாக முதல் கட்டமாக கிளந்தான், குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதி காலியானதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கிளந்தான் சட்டமன்றத் தேர்தலில் நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் பெர்சத்து கட்சி சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக பாஸ் சின்னத்தில் அஸிஸி அபு நைம், போட்டியிட்டு மகத்தான வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு தெரிவித்து,/ தாங்கள் அங்கம் வகிக்கும் பெர்சத்து கட்சிக்கு விசுவாசத்தைப் புலப்படுத்த தவறியதற்காக பெர்சத்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அஸிஸி அபு நைம்- மும் ஒருவர் ஆவார்.
அஸிஸி அபு நைம், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி அத்தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
எனினும் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் தகுதியை அஸிஸி அபு நைம், இழந்து விட்டதாக கூறி, கடந்த ஜுன் 12 ஆம் தேதி பெர்சத்து- விடமிருந்து கிளந்தான் சட்டமன்றம் ஒரு கடிதத்தைப் பெற்றது.
அந்த கடிதத்தைத் தொடர்ந்து கிளந்தான் மாநில அரசியலமைப்புச் சட்டம் 31A பிரிவின் கீழ் அஸிஸி அபு நைம், இயல்பாகவே நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்து விட்டார் என்று கிளந்தான் சட்டமன்ற சபா நாயகர் முகமது அமர் நிக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையமான SPR- ரிடம் கடித வாயிலாக தெரிவிக்கப்படும். அடுத்த 60 நாட்களுக்குள் இடைத் தேர்தலுக்கு வழிவிடப்படும் என்று சபா நாயகர் முகமது அமர் குறிப்பிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்துள்ள அஸிஸி அபு நைம், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலில் குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியில் பழம்பெரும் அரசியல்வாதி தெங்கு ரசாலி ஹம்சாவை 163 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் ஆவார்.
இதன் மூலம் கடந்த 1986 ஆம் ஆண்டிலிருந்து குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த தெங்கு ரசாலி ஹம்சாவின் அரை நூற்றாண்டுக் கால அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டியவர் அஸிஸி அபு நைம் என்பது குறிப்பிடத்தக்கது.








