ஷா ஆலாம், நவம்பர்.08-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் இன்னும் இரண்டு மூன்று வாரத்தில் சீரமைப்பு நடக்கப் போவதாகக் கூறப்படுவது குறித்து எந்தவொரு கலந்து ஆலோசிப்பும் நடத்தப்படவில்லை என்று அமானா கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
எனினும் அமைச்சரவையில் தங்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு மாற்றமும் நிகழுமானால், பிரதமர் எடுக்கக்கூடிய முடிவைத் தாங்கள் மதிப்பதாக முகமட் சாபு குறிப்பிட்டார்.
அமைச்சரவைச் சீரமைப்பு குறித்து பிரதமர் இதுவரையில் எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தவில்லை. அதே வேளையில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் அமைச்சரவைச் சீரமைப்பு செய்வதற்கு பிரதமருக்கு முழு உரிமை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான அமானா கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் முகமட் சாபு இதனைத் தெரிவித்தார்.








