தாவாவ், நவம்பர்.02-
சபா மாநில தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு வரும் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கல் மற்றும் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாக்களிப்பு ஆகியவற்றுக்கு பாதுகாப்புப் பணிகளுக்கு சுமார் பத்தாயிரம் போலீஸ்காரர்கள் களம் இறக்கப்படுவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
சபா மாநில தேர்தல் நடைபெறும் காலக் கட்டத்தில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு சபாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
அனுமதிக்கப்பட்ட விடுமுறையைத் தவிர போலீஸ்காரர்களுக்கான இதர விடுமுறைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சபா தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தொடர்பில் தாவாவில் மாநில போலீஸ் கமிஷனர் டத்தோ ஜௌதே டிகுனிடம் விளக்கம் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைஃபுடின் இவ்விவரத்தைத் தெரிவித்தார்.








