கோத்தா கினபாலு, நவம்பர்.14-
சபாவின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் சபா வாக்காளர்களுக்கு ஒரு “Gardenia” ரொட்டியை கொடுத்தால் வாக்களித்து விடுவார்கள் என்று பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் குத்தலாக விமர்சனம் செய்தது, சபா மக்களை கொதிப்படைய செய்துள்ளது.
சபா மக்களையும், “கார்டீனியா” ரொட்டியையும் தொடர்புப்படுத்தி, தாம் பேசியதற்காக கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா, பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்ட போதிலும், பாஸ் கட்சி அங்கத்துவம் பெற்றுள்ள பெரிக்காத்தான் நேஷனலின் சபா மாநிலத் தலைவர் ரொனால்ட் கியாண்டி, அந்த சட்டமன்ற உறுப்பினரை இன்று வறுத்தெடுத்துள்ளார்.
சபா மாநில மக்கள் இம்மாதம் 29 ஆம் தேதி வாக்களிக்கவிருக்கும் வேளையில், “கார்டீனியா” ரொட்டியை கொடுக்கின்றவர்களுக்கு சபா மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பது, சபா மக்களின் தன்மானத்தை உரசிப் பார்த்துள்ளார் என்று ரொனால்ட் கியாண்டி குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் கோல கெட்டில் சட்டமன்ற உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா, ஒரு முட்டாள் என்று ரொனால்ட் கியாண்டி பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
அந்த சட்டமன்ற உறுப்பினர் தனது செயலுக்காகச் சொந்தமாகவே சேற்றை வாரி பூசிக் கொண்டுள்ளார் என்று பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினரான ரொனால்ட் கியாண்டி தெரிவித்தார்.
சபா தேர்தலில் முதல் முறையாக ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் பாஸ் கட்சிக்கு, “கார்டீனியா” ரொட்டி பேரிடியை ஏற்படுத்தும் பிரசாரத்தைச் சபா மக்கள் தொடங்கியுள்ளனர்.








