Nov 28, 2025
Thisaigal NewsYouTube
இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீதான ஊழல் விசாரணை வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் – முகைதீன் யாசின் வலியுறுத்து
அரசியல்

இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீதான ஊழல் விசாரணை வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் – முகைதீன் யாசின் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், நவம்பர்.28-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் மற்றும் வர்த்தகர் ஆல்பெர்ட் தே ஆகியோருக்கு எதிரான ஊழல் விசாரணை வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் என பெர்சாத்து தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சபா தலைவர்களுக்கு எதிராக அந்த வர்த்தகர் முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளையும் எஸ்பிஆர்எம் விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நேற்று Telipok-இல் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய முகைதீன் தெரிவித்தார்.

அதே வேளையில், மத்திய அரசின் கொள்கைகளால் நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பாக சபா தேர்தல் அமைகிறது என்றும், அதைப் பயன்படுத்தி புத்ராஜெயாவிற்கு எச்சரிக்கை விடுக்குமாறு சபா மக்களை முகைதீன் கேட்டுக் கொண்டார்.

மற்ற மலேசியர்கள் போல, சபா மக்களும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மானிய மறுசீரமைப்புக் கொள்கைகள் மற்றும் அமெரிக்காவுடனான சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தேசத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் முகைதீன் யாசீன் சுட்டிக் காட்டினார்.

Related News