கோலாலம்பூர், ஜனவரி.25-
ஜோகூர் மாநிலத் தேர்தலில் 'யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்' என்ற அடிப்படையில் களம் காணத் தயார் என அறிவித்துள்ள நம்பிக்கைக் கூட்டணி, தங்களின் மாநில முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவிக்க வேண்டும் என ஜோகூர் மாநில அம்னோ இளைஞர் அணி சவால் விடுத்துள்ளது. அரசாங்க மட்டத்தில் தேசிய முன்னணி – நம்பிக்கைக் கூட்டணி இடையே முறையான அதிகாரப் பகிர்வு இல்லாத நிலையில், வரும் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதே குழப்பங்களைத் தவிர்க்கச் சரியான முடிவாக இருக்கும் என அந்நம்பிக்கைக் கூட்டணியின் ஜோகூர் மாநிலத் தலைவர் அமினோல்ஹூடா ஹசான் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஜோகூர் அம்னோ இளைஞரணித் தலைவர் நோர் அஸ்லின் அம்ப்ரோஸ், அம்னோவும் தேசிய முன்னணியும் எந்தவொரு சவாலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், நம்பிக்கைக் கூட்டணி தங்களின் முதல்வர் வேட்பாளரை துணிச்சலாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது ஜோகூர் மாநில ஆட்சி தேசிய முன்னணி வசமுள்ள நிலையில், அடுத்த மாநிலத் தேர்தல் ஏப்ரல் 2027-க்குள் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.








