கோத்தா கினபாலு, டிசம்பர்.05-
சபா மாநில பாரிசான் நேஷனல் தலைவரும், கினாபாத்தாங்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் இன்று அதிகாலை 1.40 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார்.
தீவிரமான நுரையீரல் பிரச்சினை மற்றும் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி காலமானதாக அவரது மகன் நாயிம் குர்னியாவான் மொக்தார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த 17-ஆவது சட்டமன்றத் தேர்தலில் லாமாக் தொகுதியில் போட்டியிட்டு அதனை மீண்டும் தக்க வைத்த அவர், உடல்நலக் குறைவான நிலையிலும் கூட தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்ததாகக் கூறப்படுகின்றது.
தனது அரசியல் வாழ்வில் பெரும்பகுதியைப் பாரிசான் நேஷனல் கட்சியில் தேசிய அளவிலான பின்வரிசை உறுப்பினராகக் கழித்த புங் மொக்தார், 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகே மாநில அரசியலில் இறங்கினார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு, கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் முதலாக வெற்றி பெற்ற அவர், அத்தொகுதியைக் கடந்த 2004-ஆம் ஆண்டு போட்டியின்றி வென்றது உட்பட 6 முறை தக்க வைத்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சபா பாரிசான்-அம்னோ கூட்டணி வீழ்ச்சியடைந்து, அதன் மூத்த மாநிலத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போது, சபா அம்னோவை மறுசீரமைத்து அதன் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புங் மொக்தார் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாக, சபா மாநில ஆளுநர் துன் மூசா அமான் மற்றும் மாநிலத் தலைவர்கள் பலர் அவரை மருத்துவமனையில் பார்வையிட்டுச் சென்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.








