பெத்தாலிங் ஜெயா,பிப்.2
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கும், அவரின் கூட்டணியின் நெருங்கிய சகாவான அப்துல் ஹடி அவாங்கிற்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியின் அவ்விரு முக்கியத் தலைவர்களுக்கும் இடையில் பனிப்போர் வெடித்துள்ளதாகவும் கூறப்படுவதை பாஸ் கட்சி மறுத்துள்ளது.
பெர்சத்து கட்சித் தலைவருமான முகைதீனுக்கும், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கும் இடையில் எப்பொழுதும் போலவே நல்லுறவு உள்ளது என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் தெரிவித்துள்ளார்.
டான்ஸ்ரீ முகைதீன் யாசினை விட்டு பாஸ் கட்சியோ அல்லது அதன் தலைவர்களோ விலகுவதற்கு காரணங்களே இல்லை. இரு கட்சிகளும் நல்லுறவுடன் நன்றிப் பாராட்டி வரும் பட்சத்தில் அவற்றின் தலைவர்களுக்கு இடையில் முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும் என்று துவான் இப்ராஹிம் தெளிவுப்படுத்தினார்.
எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற தேர்வில் இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, முகைதீனும், ஹாடி அவாங்கும் பேசிக் கொள்ளாத அளவிற்கு அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை துவான் இப்ராஹிம் விளக்கினார்.








