கோலாலம்பூர், டிச.10-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தனது எஞ்சிய 6 ஆண் கால சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா, அரசாணை உத்தரவு பிறப்பித்துள்ளாரா? இல்லையா? என்பதை குறித்து உறுதிப்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.
இது சட்டத்தை மீறிய செயல் என்பதால் அதனை தம்மால் உறுதிப்படுத்த இயலாது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.ஆனால், இந்த அரசாணை உத்தரவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதால் தற்போதைய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இதுகுறித்து பரிசீலிக்கலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் பெக்கான் எம்.பி. ஷேக் முகமட் ஷேக் புஸி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
நஜீப் சம்பந்தப்பட்ட இந்த அரசாணை உத்தரவு மீதான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருவதால் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அந்த அரசாணை தொடர்பில் மேன்மை தங்கிய பகாங் சுல்தானை சந்திப்பதற்கு பிரதமர் திட்டம் கொண்டுள்ளாரா? என்று அந்த பெக்கான் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.








