பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுடன் ஒத்துழைப்பதற்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தயாராகியிருப்பது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வீழ்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள கூட்டு முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் நலனை பேணுவதற்கு இருவரும் ஒன்றிணைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் மகாதீரும், முகைதீனும் ஒன்றிணைந்து கையில் எடுத்த அதே பிரம்மாஸ்திரத்தைதான் இப்போதும் கையில் எடுத்துள்ளனர் என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் ஆய்வாளருமான Hassan Abdul Karim கூறுகிறார்
அன்று தங்களின் பொது எதிரியான பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை வீழ்த்துவதற்கு துன் மகாதீரும், முகைதீனும் ஒன்றிணைந்தனர். தற்போது, பத்தாவது பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு அவர்கள் கூட்டு சேர்ந்துள்ளதைப் போல் உள்ளது என்று Hassan Abdul Karim மேற்கோள்காட்டுகிறார்.
பாஸ் கட்சியுடன் முகைதீன் இணைந்து முன்னெடுத்துள்ள மலாய் இஸ்லாம், துன் மகாதீர் தொடங்கியுள்ள மலாய் பிரகடனம் ஆகியவை பெரும் சக்தியாக உருவெடுத்து, மடானி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தயாராகி வருவதைப் போல் தற்போதைய அரசியல் நகர்வுகள் உள்ளன என்று ஒரு சட்ட நிபுணருமான Hassan Abdul Karim கூறுகிறார்.