நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக களமிறங்குகின்றார்.
பிரசாரத்தின் ஐந்தாவது நாளான இன்று, மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் தலைமையிலான மாநில அரசாங்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பக்காத்தான் ஹராப்பானின் முயற்சிக்கு அன்வாரின் வருகை முக்கிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிகேஆர் கட்சியின் தலைவருமான அன்வார், ஆம்பாங்கன், பாரோய், சிகாமட் மற்றும் செனவாங் ஆகிய நான்கு தொகுதிகளில் இன்று நடைபெறும் சமூக மற்றும் இளைஞர்களுடனான சந்திப்புகள், ஒற்றுமை விருந்து மற்றும் பக்காத்தான் ஹராப்பானின் பிரமாண்ட பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் பெந்தெங், மேடான் செலிரா ஆம்பாங்கன்-இல் நடைபெறும் சாந்தாய் பெத்தாங் பெர்சாமா வர்கா ஆம்பாங்கன் நிகழ்ச்சியுடன் தனது பிரசாரத்தைத் தொடங்கும் அவர், மாலை 5 மணியளவில் பாரோய்யிலுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு அரங்கில் நடைபெறும் "ஜெலாஜா ராகன் முடா" இளைஞர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதேவேளையில், இரவு சிகாமட் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் ஒற்றுமை விருந்தில் கலந்து கொள்ளும் அன்வார், பின்னர் புசாத் பந்தர் செனவாங்-இல் நடைபெறும் பக்காத்தான் ஹராப்பானின் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பக்காத்தான் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நெகிரி செம்பிலானை மேலும் வளர்ச்சியடைந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மாநிலமாக மாற்றும் 10 முக்கிய வாக்குறுதிகளை மக்களிடம் வலியுறுத்துவதற்கு அன்வாரின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரசாரப் பயணம் மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








