மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மசீச விலகும் என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும், அக்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு சாதகமாக அமைந்ததாகவும் தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
மலாக்கா முதலமைச்சர் அப்துல் ராவுஃப் யுசோ, மசீச தலைவர் வீ கா சியோங், தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஸம்ரி அப்துல் காடிர் ஆகியோருடனான சந்திப்பில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
எனினும், சந்திப்பின் முடிவுகளை மலாக்கா முதலமைச்சரே அறிவிப்பார் என்றும், அவருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.
மலாக்கா தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பின்போது, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மசீச தலைவர்கள் அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








